மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கிடைக்காமல் 3 நோயாளிகள் உயிரிழப்பு!
மதுரை: கவலைக்கிடமான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர், வென்ட்டிலேட்டர் செயல்படாததால், உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று சாயங்காலம் மதுரையில் இடி, மின்னலுடன் கூடிய மழை கொட்டியது. இந்த சூறைக்காற்றால் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. கரண்ட் கம்பிகள் அறுந்து விழுந்ததில், பல இடங்களில் கரண்ட் போனது.
அதுபோல, மதுரை ராஜாஜி ஆஸ்பத்திரியிலும் கரண்ட் போய்விட்டது. இதனால் உடனடியாக ஆஸ்பத்திரியில் உள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. ஆனால் அந்த ஜெனரேட்டரும் திடீரென ரிப்பேர் ஆகிவிட்டது. இதனால் ஆஸ்பத்திரி முழுக்க கரண்ட் இல்லாமல் போய்விட்டது. தலை காய சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் கருவிகளும் கரண்ட் இல்லாததால் செயல்படவில்லை. இந்த பிரிவில் சிகிச்சையில் இருந்த 15 நோயாளிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆக்சிஜன் கிடைக்காமல் அந்த சிகிச்சை பிரிவில் இருந்தவர்கள் திணறினார்கள். இதில் 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் மதுரை அருகே பூஞ்சுத்தியை சேர்ந்த மல்லிகா 55, ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் 55, ஒட்டன்சத்திரம் பழனியம்மாள் 60 ஆகியோர் ஆவர். இவர்கள் அனைவருமே கவலைக்கிடமான நிலையில்தான் அங்கு சிகிச்சை பெற்று வந்தார்கள்.
இப்படி ஆக்சிஜன் இல்லாமல் 5 நிமிடங்களில் 3 உயிர்கள் பறிபோனதை பார்த்ததும், அங்கிருந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களுடன் சண்டைக்கு போய்விட்டனர். தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் இது சம்பந்தமான விசாரணையை கையில் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment